புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உலக அளவிலான மிகப் பெரிய முழு அடைப்புக்கு, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 'ஏற்கனவே, பொருளாதார மந்த நிலை நிலவும் நேரத்தில், இந்த முழு அடைப்பு, பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய சவாலாக அமையும்' என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
நாட்டின் முதன்மையான தொழிலதிபர்கள், வங்கி உயரதிகாரிகளுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நேற்று உரையாடினார். அப்போது, கடன் மீதான வட்டி விகிதத்தை குறைக்கவும், கடனை திருப்பி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு, அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
'கொரோனா' பெருந்தொற்றிலிருந்து, மக்கள் உயிரை பாதுகாக்க, நாடு முழுதும், நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 21 நாட்களுக்கு, அதாவது, ஏப்., 14 இரவு வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ''வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்,'' என, பிரதமர் மோடி நேற்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.